பிரிட்டனின் ஸ்டாக்போர்ட் நகரில் வசிக்கும் 41 வயதுடைய நதாலி பிஷர் என்ற பெண்ணுக்கு  சமீபத்தில் நடந்த உண்மை சம்பவம் சமூக வலைதளங்களில் பரவலாக வைரலாகி வருகிறது. திடீரென கடும் தலைவலி ஏற்பட்ட நதாலி, ஓய்வெடுக்க படுக்கைக்கு சென்றார்.

பின்னர் மயக்கம் ஏற்பட்டதால் அவரது குடும்பத்தினர் அவசரமாக ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பரிசோதனையில், அவருக்கு ‘பிரெயின் அன்னியூரிசம்’ எனப்படும் மூளையில் நரம்பு வீக்கம் ஏற்பட்டிருப்பதும், அது வெடித்ததால் ரத்தம் கசிய ஆரம்பித்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

உடனடியாக அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நதாலி, தொடர்ந்து 6 வாரங்கள் கோமா நிலையில் இருந்துள்ளார். மருத்துவர்கள் கூட வாழ்நம்பிக்கை குறைவாகவே இருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் நதாலி கோமா நிலையிலும் குடும்ப உறுப்பினர்களின் உரையாடல்களும், அழுகையும், மருத்துவர்களின் பரிசீலனைகளையும் கேட்டதாகக் கூறி அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளார். “என் அம்மா என் கையை பிடிக்கச் சொல்ல கேட்டேன், முயற்சி செய்தேன், ஆனால் என் உடல் வேலை செய்யவில்லை… என் கண்கள் மூடியே இருந்தாலும், எல்லாம் உணர்ந்தேன்” என்று நதாலி பகிர்ந்துள்ளார்.

மேலும், கோமா நிலையில் அவர் தனது மறைந்த பாட்டியின் குரல் கேட்டதாகவும், “உன் அம்மாவிடம் திரும்பிச் செல்” எனக் கூறியதும், அதன்பின் தான் கண் திறந்ததாகவும் நதாலி கூறியுள்ளார். பிறகு, நதாலியை ‘சல்போர்ட் ராயல் ஹாஸ்பிட்டல்’ எனும் சிறப்பு மருத்துவமனைக்கு மாற்றி, நரம்பியல் அறுவை சிகிச்சை மூலம் பாதிக்கப்பட்ட நரம்புகளை உலோக கிளிப் மூலம் சீலிங் செய்து உயிரைக் காப்பாற்றினர். 2025 ஆம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதி நதாலி விழித்தெழுந்தார்.

தற்போது நதாலி ஆபத்தான நிலையைத் தாண்டியுள்ளார். ஆனால், வென்டிலேட்டர் குழாயின் காரணமாக அவர் குரல் மற்றும் தொண்டையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார். “என் குழந்தைகளே என் உலகம்… சிறு சிறு முன்னேற்றங்களால் நான் மீண்டும் முழுமையாக நடக்கப்போகிறேன் என்பதை நம்புகிறேன்” என நம்பிக்கையுடன் கூறியுள்ளார். எனினும், கோமா நிலையில் இருக்கும் நபர்கள் அடையாளம் கூறும் குரல்களைக் கேட்கும் திறன் இருக்கலாம் என NHS தெரிவித்துள்ளது.