மகாராஷ்டிர மாநிலம் மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடுத்தடுத்து ஏற்பட்ட தீ விபத்துகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. மீரா-பயந்தர் பகுதியில் உள்ள பிளெசன்ட் பார்க் குடியிருப்பு வளாகத்தில் திடீரென ஏற்பட்ட தீ, கண் இமைக்கும் நேரத்தில் நான்கு முதல் ஐந்து கட்டிடங்களுக்குப் பரவி பெரும் சேதத்தை விளைவித்தது.
இந்த விபத்தில் பல வீடுகள் மற்றும் இரண்டுக்கும் மேற்பட்ட வாகனங்கள் தீக்கிரையாயின. கியாஸ் சிலிண்டர் வெடித்ததே இந்த விபத்திற்கு முதற்காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றாலும், பல மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகே தீயணைப்பு வீரர்களால் தீயைக் கட்டுக்குள் கொண்டு வர முடிந்தது.
அதேபோல், அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள லோகண்ட்வாலா காம்ப்ளக்ஸ் குடியிருப்பின் 9-வது மாடியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 22 மாடிகளைக் கொண்ட இந்த உயரமான கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது.
இதேபோன்று கல்யாண் பகுதியில் உள்ள மாடல் காலேஜ் அருகிலுள்ள கடைகளிலும் தீ விபத்து ஏற்பட்டதால் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சம் நிலவியது. மும்பையின் பல்வேறு பகுதிகளில் ஒரே நாளில் அடுத்தடுத்து நிகழ்ந்த இந்தத் தீ விபத்துகள் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளன.
