மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் இந்தியாவின் இணையச் சேவை பாதிக்கப்படுமோ என்ற அச்சம் தற்போது எழுந்துள்ளது. குறிப்பாக, உலகளாவிய இணையப் போக்குவரத்தில் 95% க்கும் அதிகமான தரவுகள் கடலுக்கு அடியில் உள்ள ஃபைபர்-ஆப்டிக் கேபிள்கள் வழியாகவே பரிமாறப்படுகின்றன. ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவும் போர் பதற்றத்தால், ரெட் சீ மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி பகுதிகளில் அமைந்துள்ள இந்த கேபிள்கள் சேதமடையக்கூடும் என அஞ்சப்படுகிறது.

மேலும் இந்தியாவிலிருந்து ஐரோப்பா மற்றும் அமெரிக்கா செல்லும் இணையத் தரவுகளில் பெரும் பகுதி இந்த வழியாகவே செல்வதால், இவை துண்டிக்கப்பட்டால் இந்தியாவின் இணைய வேகம் வெகுவாகக் குறைய வாய்ப்புள்ளது. இது வங்கிக் பரிவர்த்தனைகள், கிளவுட் சேவைகள் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

இந்த இக்கட்டான சூழலைச் சமாளிக்க இந்திய அரசு மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. மத்திய தொலைத்தொடர்புத் துறை ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ போன்ற நிறுவனங்களை மாற்றுப் பாதைகளை தயார் நிலையில் வைக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. கேபிள்கள் சேதமடைந்தால், சிங்கப்பூர் அல்லது பசிபிக் பெருங்கடல் வழியாக தரவுகளைத் திருப்பி விடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

மேலும், சொந்தமாக கேபிள் பழுதுபார்க்கும் கப்பல்களை உருவாக்க ₹4,000 கோடி நிதி ஒதுக்கீடு மற்றும் இந்தியக் கடற்படைக் கப்பல்களைப் பயன்படுத்துவது போன்ற நீண்டகாலத் திட்டங்களையும் இந்தியா முன்னெடுத்துள்ளது. இதன் மூலம் நாட்டின் டிஜிட்டல் கட்டமைப்பைப் பாதுகாக்கவும், இணையச் சேவை முற்றிலும் முடங்குவதைத் தவிர்க்கவும் இந்தியா தயாராகி வருகிறது.