மத்தியப் பிரதேச மாநிலம் ததியா மாவட்ட ஆட்சியர் ஸ்வப்னில் வான்கடே (IAS) மற்றும் எஸ்பி சூரஜ் வர்மா ஆகியோர் பீக்கர் கிராமத்தில் இரவு தங்கி, கிராம மக்களுடன் நேரடியாகக் கலந்துரையாடி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.

இரவு 10 மணியளவில் கிராமத்தைச் சேர்ந்த பெரியவர் ஒருவர், தனது ஒரு வயதுப் பேரனின் பிறந்தநாளுக்கு வருமாறு ஆட்சியரிடம் உருக்கமாக அழைப்பு விடுத்தார். உணவை முடித்துவிட்டு ஓய்வெடுக்கத் தயாராக இருந்த போதிலும், அந்தப் பெரியவரின் அன்பான வேண்டுகோளைத் தட்ட முடியாமல் ஆட்சியரும் எஸ்பியும் அந்த வீட்டின் விசேஷத்திற்குச் சென்று குழந்தையை வாழ்த்தினர். அதிகாரிகளின் இந்த எளிமையான அணுகுமுறை கிராம மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மறுநாள் காலையில் கிராமத்தின் தெருக்களில் நடைப்பயணமாகச் சென்ற ஆட்சியர், விவசாயிகளின் வீடுகளில் தேநீர் அருந்திவிட்டு அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார். பள்ளிகளை ஆய்வு செய்ததோடு, மாணவர்களின் கனவுகள் குறித்துக் கலந்துரையாடிய அவர், அரசுத் திட்டங்கள் வெறும் கோப்புகளோடு நிற்காமல் நேரடியாக மக்களைச் சென்றடைய வேண்டும் என அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவிட்டார்.

திறந்தவெளியில் படுத்து உறங்கி, மக்களுடன் மக்களாகக் கலந்த ஆட்சியரின் இந்தச் செயல், சமூக வலைதளங்களில் “உண்மையான மக்கள் சேவகர்” எனப் பாராட்டுகளைக் குவித்து வருகிறது.