தாய்லாந்துக்கான இந்தியத் தூதர் நாகேஷ் சிங், தனது பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் அந்நாட்டு அரசரையும் அரசியையும் நேரில் சந்தித்து விடைபெற்றார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தையும் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளன. 1995-ஆம் ஆண்டு ஐ.பி.எஸ் (IFS) அதிகாரியான நாகேஷ் சிங், கடந்த 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தாய்லாந்துக்கான இந்தியத் தூதராக நியமிக்கப்பட்டார். அவரது பணிக்காலம் தற்போது நிறைவடைந்த நிலையில், முறைப்படி அந்நாட்டு மன்னர் மற்றும் ராணியைச் சந்தித்து விடைபெற்றார்.

இந்தியத் தூதரகம் பகிர்ந்துள்ள இந்தப் புகைப்படங்களில், உயர் பதவியில் இருக்கும் ஓர் அதிகாரி மன்னர் முன் தரையில் மண்டியிட்டு அமர்ந்திருப்பது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஒரு நாட்டின் தூதர் ஏன் இவ்வாறு அமர வேண்டும் என்ற கேள்வி இணையத்தில் எழுந்தது.

தாய்லாந்து நாட்டின் கலாச்சாரப்படி, அந்நாட்டு அரச குடும்பத்தினரைச் சந்திக்கும்போது அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இவ்வாறு மண்டியிட்டு அமருவது தொன்றுதொட்டு நிலவி வரும் ஒரு பாரம்பரியமாகும். ‘கிராப்’ என்று அழைக்கப்படும் இந்த நடைமுறை, அந்நாட்டின் மிக உயரிய மரியாதையாகக் கருதப்படுகிறது. ராணுவ உயர் அதிகாரிகள் முதல் நிர்வாக அதிகாரிகள் வரை அனைவரும் இந்த முறையையே பின்பற்றுகின்றனர். அந்நாட்டு மரபுக்கு மதிப்பளிக்கும் விதமாகவே இந்தியத் தூதர் அவ்வாறு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசரைச் சந்தித்த பிறகு, நாகேஷ் சிங் தாய்லாந்து பிரதமர் அனுதின் சர்ன்விராகுலையும் சந்தித்துப் பேசினார். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்த ஒத்துழைப்பு நல்கியதற்காக அவர் தனது நன்றியைத் தெரிவித்தார். தாய்லாந்து தூதராகப் பணியாற்றுவதற்கு முன்பு, இந்திய வெளியுறவுத் துறையில் ‘தலைமை நெறிமுறை அதிகாரியாக’ (Chief of Protocol) நாகேஷ் சிங் பணியாற்றியுள்ளார். மேலும் அட்லாண்டாவில் இந்தியத் துணைத் தூதராகவும் (2015-2018), இந்தியக் குடியரசுத் துணைத் தலைவரின் இணைச் செயலாளராகவும் (2012-2015), வெளியுறவு அமைச்சகத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் பிரிவுகளின் இயக்குநராகவும் பணியாற்றிய நீண்ட அனுபவம் கொண்டவர்.

மேலும் பல்வேறு சர்வதேசப் பொறுப்புகளைத் திறம்பட வகித்த நாகேஷ் சிங்கின் இந்த ராஜதந்திர அணுகுமுறை மற்றும் அந்நாட்டு கலாச்சாரத்திற்கு அவர் அளித்த மரியாதை தற்போது அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.