பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று நள்ளிரவு வேளையில் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில் அருகே சிறுவன் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியளிக்கிறது. இக்குற்றத்தில் தொடர்புடையவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு நாள் காலையிலும் இன்று எங்கே கொலை நடந்துள்ளது எந்தப் பெண்ணிற்கு பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது என்ற அச்சத்திலேயே பொழுது விடிவது தான் தவெகவின் மாற்று அரசியலா?
தமிழகத்தின் முதல்வராகப் பதவியேற்றுள்ள திரு. ஜோசப் விஜய் அவர்கள் நிர்வாகத்தின் அடிப்படையைக் கற்றுக்கொள்ள இன்னும் எத்தனை உயிர்களைக் காவு கொடுக்க வேண்டும்? தேர்தலின் போது திமுக ஆட்சியில் சீர்குலைந்து கிடந்த சட்டம் ஒழுங்கைப் பற்றி கடுமையாக விமர்சித்த திரு. ஜோசப் விஜய் அவர்கள், தான் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் முதலில் அதைத் தானே சரி செய்திருக்க வேண்டும்? அதை விட்டுவிட்டு ஊரில் உள்ள குற்றவாளிகளை எல்லாம் தேடித்தேடி அமைச்சராக்குவதில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தால் மக்களின் பாதுகாப்பை எப்படி உறுதி செய்ய முடியும்?
ஆட்சி மட்டும் தான் மாறியுள்ளதே தவிர, அவலங்கள் அப்படியே தான் தொடர்கின்றன! கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகத்தையே உலுக்கிய கோவை சிறுமியின் பாலியல் வன்கொடுமை மற்றும் படுகொலையின் ரணம் ஆறும் முன்னே, மீண்டும் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி கடும் அதிர்ச்சியளிக்கிறது. பாதிக்கப்பட்ட சிறுமி முழு மன மற்றும் உடல் நலத்துடன் விரைவில் குணமடைந்து இக்கொடூரத்தை கடந்து வர நாம் அனைவரும் துணை நிற்போம்.
தனக்கு ஓட்டுப் போடுமாறு பெற்றோர்களை நச்சரியுங்கள் என எந்தக் குழந்தைகளை திரு. ஜோசப் விஜய் அவர்கள் தூண்டி விட்டாரோ, நான் தான் உங்கள் தாய்மாமன் என சென்டிமென்ட் வசனம் பேசி எந்தக் குழந்தைகளுக்கு திரு. ஜோசப் விஜய் அவர்கள் தூண்டில் போட்டாரோ, அந்தக் குழந்தைகள் தான் தினசரி ஒரு பாலியல் மிருகத்திடம் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருப்பதை அவர் வேடிக்கை பார்ப்பது மலினமான குணாதிசயம். இவ்வாறு தனது ஆட்சியில் நடக்கும் எந்தப் பிரச்சினைகளையும் கண்டு கொள்ளாமல், “மற்றொரு பொம்மை” போல முதல்வர் அரியணையில் அமர்ந்திருக்கும் திரு. ஜோசப் விஜய் அவர்களுக்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? என்று பதிவிட்டுள்ளார்.
