மதுரை மாவட்டம் பாரப்பத்தியில், தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு இன்று மாலை மிகப்பெரிய திரளான கூட்டத்துடன் துவங்கி நடந்து வருகிறது. மேடையில் இருந்த நிர்வாகிகளுக்கு வணக்கம் தெரிவித்த தவெக தலைவர் விஜய், பின்னர் தன்னை வரவேற்க நின்ற தனது தாய் சாந்தி மற்றும் தந்தை ச.ஏ.சாந்தகுமாரை மரியாதையுடன் இருக்கையில் அமரவைத்தது பாராட்டை பெற்றது. பிறகு, ரேம்ப் வழியாக சென்ற விஜய், தொண்டர்கள் வீசிய துண்டுகளைக் கழுத்தில் போட்டு உற்சாகமாக நடந்து வந்தார். அப்போது சில தொண்டர்கள் தடுப்புக் கம்பியை தாண்டி மேடைக்கு வர முயற்சி செய்ததால், பவுன்சர்கள் உடனடியாக தடுக்க நடவடிக்கை எடுத்தனர்.

மாநாட்டின் முக்கிய அம்சமாக, தனது உரையில் பாஜகவை நேரடியாக விமர்சித்த விஜய், “தாமரை இலையில் தண்ணீரே ஒட்டாது… தமிழக மக்கள் மட்டும் எப்படி ஒட்டுவாங்க?” என்ற ஒற்றை வரியுடன் கைத்தட்டல்களை குவித்தார். இந்த வாக்கியம் முழு அரங்கத்தையும் அதிரவைத்தது. இது ஒரு பக்கம் பாஜகவின் தமிழ்நாடு வளர்ச்சி பற்றிய போக்கை விமர்சிப்பதுடன், மற்றொரு பக்கம் தமிழக மக்களின் அரசியல் விழிப்புணர்வையும் வலியுறுத்தும் வகையில் அமைந்தது. விஜயின் இப்பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.