
கர்நாடக மாநிலம் பெங்களூரு தலகட்டா புரா பகுதியில் சேர்ந்த அஞ்சனா என்ற 20 வயது இளம் பெண் அந்த பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வந்துள்ளார் . அதனைப் போல அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீகாந்த் என்ற ஆட்டோ ஓட்டுநருக்கு திருமணம் ஆகி மனைவி உள்ளார். அஞ்சனா படிக்கும் கல்லூரியில் ஸ்ரீகாந்தம் படித்து வந்த நிலையில் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் காதலாக மாறிய நிலையில் தனக்கு ஏற்கனவே திருமணம் ஆனாலும் அஞ்சனாவை ஸ்ரீகாந்த் காதலித்து வந்துள்ளார். அவர்கள் திருமணம் செய்யவும் முடிவு செய்த நிலையில் இந்த காதல் விவகாரம் அஞ்சனாவின் வீட்டிற்கு தெரிய வர பெற்றோர்கள் கண்டித்துள்ளனர். இருவரது வீட்டிலும் எதிர்ப்பு எழுந்ததால் இருவரும் மனமடைந்தனர்.
இந்த நிலையில் கடந்த ஜூலை 1ஆம் தேதி அவர்கள் இரண்டு பேரும் திடீரென்று மாயமானார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவர்களை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. உடனே போலீசில் புகார் அளித்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நைஸ் சாலையில் உள்ள ஏரி பகுதியில் கார் ஒன்று நின்றது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காரில் இரண்டு செல்போன்கள் கிடந்ததையும் அவை மாயமானதாக தேடப்பட்ட கள்ளக்காதல் ஜோடி அஞ்சனா மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோரது செல்போன்கள் என்பதையும் கண்டறிந்தனர்.
இதனால் இருவரும் ஏரியில் குதித்து தற்கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்த நிலையில் பிறகு நீண்ட நேர தேடலுக்குப் பிறகு இருவரது உடல்களும் கைகள் கட்டப்பட்ட நிலையில் ஏரியில் கிடந்தன. இதனை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் திருமணம் செய்து சேர்ந்து வாழ குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் கயிற்றால் கைகளை கட்டிக் கொண்டு ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. மேலும் தற்கொலை செய்வதற்கு முன்பு அஞ்சனா தன்னுடைய செல்போனில் எடுத்த வீடியோவில் தங்கள் சாவுக்கு தாங்களே காரணம் என்றும் கூறியிருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.