தமிழக வெற்றிக்கழகம் (த.வெ.க.) கட்சியின் தலைவர் விஜய், மாவட்டம் தோறும் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டங்களை நடத்தி வருகிறார். கரூர் சம்பவத்திற்குப் பின்னர், தமிழ்நாட்டில் அவர் பங்கேற்கும் முதல் பிரமாண்ட பொதுக்கூட்டமாக ஈரோடு மாவட்டத்தில் நடைபெறும் கூட்டம் அமைய உள்ளது.
இந்த பொதுக்கூட்டத்தில் சுமார் 10 ஆயிரம் தொண்டர்களும், 25 ஆயிரம் பொதுமக்களும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, விஜயமங்கலம் பகுதியில் 16 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட பொதுக்கூட்ட மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், வாகன நிறுத்த வசதிக்காக கார்கள் உள்ளிட்ட வாகனங்களுக்கு 60 ஏக்கரும், இருசக்கர வாகனங்களுக்கு 20 ஏக்கரும் என மொத்தம் 80 ஏக்கர் பரப்பளவில் இடம் தயார் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பொதுக்கூட்டம் இன்று 11 மணி முதல் 1 மணி வரை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய் கலந்து கொண்டு பொதுமக்களை சந்தித்து உரையாற்ற உள்ளார். இதற்காக அவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை விமான நிலையம் வந்து, அங்கிருந்து கார் மூலம் நேரடியாக பொதுக்கூட்ட மைதானத்திற்கு வர உள்ளார். அங்கு பிரத்தியேக பிரசார வாகனத்தில் நின்று கொண்டு பொதுமக்களை சந்தித்து பேசுவார்.
பொதுக்கூட்டத்தை முன்னிட்டு கடந்த இரண்டு நாட்களாகவே தொண்டர்கள், ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாக பொதுக்கூட்ட மைதானத்தை நோக்கி வந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானத்தை ஆய்வு செய்த பின்னர் முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “பொதுக்கூட்டத்திற்கு வருபவர்களுக்கு உணவு வழங்கும் திட்டம் இல்லை. காவல்துறை விதித்த அனைத்து நிபந்தனைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கு குடிநீர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்படும். காலை 8 மணி முதல் பொதுக்கூட்ட இடத்திற்கு வரலாம். கியூஆர் கோடு அல்லது பாஸ் எதுவும் தேவையில்லை” என்று தெரிவித்தார்.
