தனியார் மேடையில் நிகழ்ச்சி நடைபெறும் போதும், அரசியல் பிரசார மேடைகளிலும், முக்கிய பிரமுகர்களுக்கான மத்திய அரசின் பாதுகாப்பு வழங்கும் நடைமுறையில் ‘ஒய்’, ‘இசட்’ போன்ற பிரிவுகள் உள்ளன. அந்த வகையில், கடந்த மார்ச் மாதம் முதல் த.வெ.க.தலைவர் விஜய்க்கு மத்திய உளவுத்துறையின் பரிந்துரையின் பேரில் ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், செப்டம்பர் 27-ஆம் தேதி, கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற த.வெ.க. பிரசார கூட்டத்தில் விஜய் மேடையில் உரையாற்றிக்கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மேடையின் திசையில் செருப்பு வீசும் சம்பவம் நிகழ்ந்தது.
இதையடுத்து, சம்பவம் தொடர்பாக புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மேலும், விஜய்க்கு வழங்கப்பட்டுள்ள மத்திய பாதுகாப்பு போதுமானதா? அந்த நாள் நிகழ்வில் பாதுகாப்பு மீறல் ஏற்பட்டதா? என்பது தொடர்பாக, அவரது பாதுகாப்பு அதிகாரிகளிடம் உள்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் பாதுகாப்பு அதிகாரிகள் அளிக்கும் பதில்களின் அடிப்படையில், விஜய்க்கு வழங்கப்படும் பாதுகாப்பு இன்னும் அதிகரிக்கப்படுவதற்கான சாத்தியம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
