
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியினை தொடங்கிய நிலையில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார். நடிகர் விஜய் கட்சி தொடங்கி ஒரு வருடம் நிறைவடைந்து விட்ட நிலையில் அவருடைய கட்சியின் முதலாம் ஆண்டு விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் விழா விரைவில் நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளுக்கும் நடிகர் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். தமிழ்நாட்டில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு கண்டிப்பாக வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் தமிழக வெற்றி கழகத்தினர் இருக்கிறார்கள்.
இந்நிலையில் நடிகர் விஜய் முதல் மாநாட்டின் போது கூட்டணி கட்சிகளுக்கும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு உண்டு என்று அறிவித்துள்ளார். அடுத்து வரும் தேர்தலில் தமிழ்நாடு மட்டுமின்றி புதுச்சேரியிலும் தமிழக வெற்றி கழகம் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே முதல்வர் ரங்கசாமியை நடிகர் விஜய் பலமுறை சந்தித்து பேசிய நிகழ்வுகள் நடந்துள்ளது. இந்நிலையில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி நேற்று செய்தியாளர்களை சந்தித்த நிலையில் அவரிடம் விஜயுடன் கூட்டணி வைப்பீர்களா என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் விஜய் எனக்கு சிறந்த நண்பர் என்று கூறினார். மேலும் கூட்டணி தொடர்பாக தேர்தல் சமயத்தில் முடிவு செய்யப்படும் என்றும் அப்போது அது குறித்து அறிவிப்புகள் வெளியாகும் என்றும் கூறினார்.