உச்சநீதிமன்றம் கரூர் துயரச் சம்பவ வழக்கை சிபிஐக்கு மாற்றியதைத் தொடர்ந்து, “நீதி வெல்லும்” என தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது திமுக தரப்பில் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, திமுக ஐடி விங் பிரிவு வெளியிட்ட சர்ச்சைக்குரிய போஸ்டர் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி, அரசியல் சூழ்நிலையை பரபரப்பாக்கியுள்ளது.

அந்தப் போஸ்டரில், “தவெக கொல்லும் நீதி வெல்லும்! 41 உயிர்களை இறந்த பின்னும், பனையூரில் பதுங்கி கொண்டு ‘நீதி வெல்லும்’ என ட்வீட் போடும் விஜய் – இது என்ன நீதி?” எனக் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. மேலும், “சிபிஐ என்பது பாஜகவின் கைப்பாவை என்று கூறிய அதே விஜய், இன்று அந்தக் கைப்பாவையின் கைப்பாயாக மாறியிருக்கிறார்” எனும் வாசகங்களும் இடம்பெற்றுள்ளன.

இவையனைத்தும் , முரசொலி நாளிதழில் வெளியான கட்டுரையை மேற்கோள்காட்டி, பதிவிடப்பட்டுள்ளது. மேலும் “பாஜகவையே பாசிசம் என கூறிய விஜய், இன்று அதே பாஜகவுடன் அரசியல் இணைப்பை உருவாக்கியிருக்கிறார். நரேந்திர தாமோதர் தாஸ் மோடிஅவர்களே என விஜய் கூறிய பின்னும் பாஜக விற்கு கோபம் வரவில்லையென்றால் – இது ஸ்கிரிப்ட் அதுவும் பாஜக ஸ்கிரிப்ட் ஆக தானே இருக்க வேண்டும் ? எனவும் அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“>

 

திமுக ஆதரவாளர்களால் பரவலாக பகிரப்படும் இந்தப் போஸ்டர், சமூக வலைத்தளங்களில் கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளதுடன், விஜய் மற்றும் தமிழக வெற்றிக் கழக ஆதரவாளர்களும் அதற்கு எதிராக தங்கள் பதில்களை வெளியிட்டு வருகின்றனர். இதனால், “நீதி வெல்லும்” எனும் ஒரு வரி தற்போது தமிழ்நாட்டு அரசியல் சூழலில் பெரிய விவாதக் கருவியாக மாறியுள்ளது.