தமிழக வெற்றிக் கழகம் மற்றும் காங்கிரஸ் இடையே கூட்டணி அமைய வேண்டும் என இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் தெரிவித்த கருத்துக்கு, தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை நறுக்கெனப் பதிலடி கொடுத்துள்ளார்.
திருவாரூரில் ஜனவரி 28-ஆம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்த இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் பேசுகையில், “தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி மற்ற கட்சிகளுக்கு ஆதரவு அளித்தே தேய்ந்து போய்விட்டது. காங்கிரஸ் இழந்த பலத்தை வழங்க நாங்கள் (தவெக) தயாராக இருக்கிறோம். குறிப்பாக, என் மகன் விஜய் அந்தப் பலத்தை உங்களுக்குத் தரக் காத்திருக்கிறார். இதனைப் பயன்படுத்திக் கொண்டால் காங்கிரஸ் தனது பழைய வரலாற்றை மீட்டெடுக்க முடியும்” எனத் தெரிவித்திருந்தார்.
எஸ்.ஏ.சி-யின் இந்தக் கருத்து குறித்து அரக்கோணத்தில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, செல்வப்பெருந்தகை நகைச்சுவையுடன் பதிலளித்தார். அவர் கூறியதாவது: “நாங்கள் ஏற்கனவே ‘பூஸ்ட்’ சாப்பிட்டு தெம்பாகத்தான் இருக்கிறோம். எங்கள் தொண்டர்களைப் பாருங்கள், அனைவரும் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். எங்களுக்குத் தேவையான பூஸ்ட், ஹார்லிக்ஸ் என அனைத்தையும் ராகுல் காந்தி ஏற்கனவே கொடுத்துவிட்டார். எனவே, எங்களுக்குப் புதிதாக யாரும் பூஸ்ட் தர வேண்டிய அவசியம் இல்லை. இருந்தாலும், பூஸ்ட் தருகிறேன் என்று சொன்ன எஸ்.ஏ. சந்திரசேகருக்கு எனது நன்றிகள் என்றார்.
தவெக – காங்கிரஸ் கூட்டணி குறித்து எஸ்.ஏ.சி திடீரெனப் பேசியது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அவருக்கு நெருக்கமான வட்டாரங்களில் விசாரித்தபோது, “கூட்டணி தொடர்பாக காங்கிரஸ் தரப்பில் இருந்து இதுவரை எந்தப் பேச்சுவார்த்தையும் வரவில்லை. எனவே, ஒரு தொடக்கப் புள்ளியாக இந்தப் பேச்சை எடுக்குமாறு விஜய் தரப்பில் கேட்டுக்கொண்டதாலேயே எஸ்.ஏ.சி இவ்வாறு பேசினார்” எனத் தெரிகிறது. மேலும் தவெக முதல் மாநாட்டைத் தொடர்ந்து, அடுத்தகட்டமாக கூட்டணி வியூகங்களை வகுப்பதில் அக்கட்சி தீவிரம் காட்டி வருவதையே இந்தச் சம்பவங்கள் உணர்த்துவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
