நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த மறைந்த பழங்குடியின ஓவியர் கிருஷ்ணனின் குடும்பத்திற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உறுதியளித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியைச் சேர்ந்த பழங்குடியின குரும்பா இனத்தைச் சேர்ந்தவர் ஓவியர் கிருஷ்ணன். பாரம்பரிய குரும்பா கலை வடிவத்தைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்காற்றிய இவருக்கு, மத்திய அரசு சமீபத்தில் உயரிய ‘பத்மஸ்ரீ’ விருதை அறிவித்து கௌரவித்தது. இதற்கிடையே, அவர் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள கல்லாறு பகுதியில் வசித்து வந்த நிலையில், சமீபத்தில் காலமானார்.
இந்நிலையில், கல்லாறு பாக்கு தோப்புப் பகுதியில் உள்ள ஒரு சிறிய குடிசை வீட்டில் வசித்து வரும் கிருஷ்ணனின் மனைவி சுசீலா மற்றும் அவரது குழந்தைகளை, பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் சதீஸ்குமார் நேரில் சந்தித்து இனிப்புகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
அப்போது, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தொலைபேசி வாயிலாக கிருஷ்ணனின் மனைவி சுசீலாவிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: “பத்மஸ்ரீ விருது பெற்ற கிருஷ்ணனின் கலைச் சேவை ஈடு இணையற்றது. அவரது மறைவு வருத்தமளித்தாலும், அவரது குடும்பத்தையும் குழந்தைகளின் கல்வியையும் மத்திய அரசு கைவிடாது. உங்களது வாழ்வாதாரத்திற்கும், குழந்தைகளின் எதிர்கால கல்விக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்றார்.
அமைச்சரின் இந்த நெகிழ்ச்சியான உறுதியைக் கேட்ட சுசீலா, கணவரை இழந்த துயரத்திலும் தனது குடும்பத்திற்குப் பாதுகாப்பு வழங்க முன்வந்த மத்திய அமைச்சருக்குக் கண்ணீர் மல்க நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். மேலும் பாரம்பரியக் கலையைப் போற்றும் விதமாக ஒரு பழங்குடியின கலைஞரின் குடும்பத்தைத் தேடிச் சென்று அரசு உதவிக்கரம் நீட்டுவது அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
