
விஜய்யின் தமிழக வெற்றிக்கழகத்தின் தேர்தல் பிரிவு பொதுச் செயலாளராக உள்ள ஆதவ் அர்ஜுனா, கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் பரவி வந்த தகவல், கட்சித் தரப்பில் மறுக்கப்பட்டுள்ளது. ஆதவ் அர்ஜுனா, விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகி, கடந்த ஜனவரி மாதம் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்திருந்தார். இந்நிலையில், அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக வெளியாகிய தகவல், தவெகவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த செய்தி உண்மை அல்ல என்றும், கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதாக பரவும் தகவல்கள் வெறும் வதந்திகள் என தவெக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
கட்சித் தலைமை தெரிவித்ததாவது, “சமூக வலைதளங்களில் ஆதவ் அர்ஜுனா குறித்து பரவும் தகவல் முற்றிலும் பொய்யானது. இது ஒரு போலி செய்தியாக மட்டுமே பார்க்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது. ஆதவ் அர்ஜுனா கட்சியின் முக்கிய பொறுப்பில் தொடர்ந்து இருப்பதாகவும், அவரை நீக்கப்படுவது குறித்து எந்த உத்தியோகபூர்வ அறிவிப்பும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த விவகாரம் குறித்து சமூக வலைதளங்களில் வதந்திகளை பரப்புவதை தவிர்க்க வேண்டும் என தவெகவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.