திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆய்வு நடத்திய தவெக (தமிழக வெற்றி கழக) அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், அங்குள்ள அர்ச்சகர்களை இழிவுபடுத்திவிட்டதாக திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டியிருந்த நிலையில், அதற்கு அமைச்சர் ரமேஷ் தற்பொழுது மிகக் கடுமையான முறையில் பதிலடி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அமைச்சர் ரமேஷ், “தவறு செய்தவர்களைத் தண்டித்தால் உங்களுக்கு ஏன் இவ்வளவு கொந்தளிப்பும் பதற்றமும் வருகிறது? மக்களைச் சுரண்டிப் பிழைக்கும் யாராக இருந்தாலும், சாதி மத பாகுபாடின்றி கடுமையான நடவடிக்கை எடுக்கவே மக்கள் தவெக-வுக்கு வாக்களித்து ஆட்சியில் அமர்த்தியுள்ளனர்” என்று அனிதா ராதாகிருஷ்ணனின் குற்றச்சாட்டை மொத்தமாகத் தவிடுபொடியாக்கியுள்ளார். மேலும், அர்ச்சகர்களின் செயல்பாடுகள் குறித்துக் காட்டமாகப் பேசிய அமைச்சர், “பக்தர்களிடம் சட்டவிரோதமாகப் பணம் பெற்றுக்கொண்டுதான் சேவை செய்ய வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை” என்று சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து திமுக-வின் அரசியல் இரட்டை வேடத்தைக் கடுமையாகச் சாடிய அவர், “நேற்று வரை சாதியை வைத்து அவர்களுக்கு ஆதரவாகச் செயல்படுகிறேன் என்று பேசிய திமுகவினர், இன்று அதே சாதியைச் சார்ந்தவர்களை நான் அவமதித்து விட்டதாகப் புதிய நாடகத்தை அரங்கேற்றுகிறார்கள்” என்று அனிதா ராதாகிருஷ்ணனுக்கு நெத்தியடி பதிலடி கொடுத்துள்ளார். இந்த விவகாரம் தற்பொழுது தவெக மற்றும் திமுக இடையே ஒரு பெரிய அரசியல் போர்க்களத்தையே உருவாக்கியுள்ளது.
