
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெலகாவி மாவட்டத்தில் சாந்தன் நாசரேத் (82)- பிளேவியானா (79) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் வீட்டில் சடலமாக கிடந்ததாக அக்கம் பக்கத்தினர் காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இருவரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து பின்னர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது சாந்தன் தான் கைப்பட எழுதிய ஒரு தற்கொலை கடிதத்தை போலீசார் கண்டுபிடித்தனர். அதில் எனக்கு 82 வயது ஆகும் நிலையில் என்னுடைய மனைவிக்கு 79 வயது ஆகிறது.
எங்களைப் பார்த்துக் கொள்ள ஆள் யாரும் இல்லாத நிலையில் நாங்கள் யார் தயவிலும் வாழ விரும்பாததால் இப்படி ஒரு முடிவை எடுத்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து அவர்களுடைய சொத்து மற்றும் நிதி விவரங்களை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது சைபர்மோசடியில் சாந்தன் 50 லட்ச ரூபாய்க்கு மேல் ஏமாந்தது தெரிய வந்த நிலையில் அவர்கள் கூடுதலாக பணம் கேட்டு தொடர்ந்து தொந்தரவு கொடுத்ததால் மன உளைச்சலில் இப்படி ஒரு முடிவை எடுத்தது தெரியவந்தது. அந்த தற்கொலை கடிதத்தில் சுமித் பிர்ரா மற்றும் அணில் யாதவ் தான் தங்களுடைய மரணத்திற்கு காரணம் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் இதை வைத்து போலீசார் துரிதமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.