ஹரியானாவின் மொஹம்மத்பூர் ஜாட்சா கிராமத்தில் பூஜன் பிரசாத் என்ற ஒப்பந்ததாரர், தனது மனைவி மற்றும் மூன்று மகன்களுடன் வசித்து வந்தார். ஒரு வாரமாக அவர் வீடு திரும்பாததால், அவரது மகன் சந்தீப் குமார் செப்டம்பர் 1 அன்று காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆகஸ்ட் 28 அன்று, செக்டர்-37 பகுதியில் உள்ள ஒரு காலி கிடங்கு அருகே தலை துண்டிக்கப்பட்ட உடல் கிடைத்தது. சந்தீப், அந்த உடலில் இருந்த காயத்தின் அடையாளம் மற்றும் பூஜன் அணிந்திருந்த உடைகள் போன்றவை வைத்து, அதை தனது தந்தையின் உடல் என உறுதிப்படுத்தினார்.
பின்னர், குடும்பத்தினர் செவ்வாய்க்கிழமை அந்த உடலுக்கு இறுதிச் சடங்கு செய்தனர். ஆனால், புதன்கிழமை, பூஜனின் மைத்துனர் ராகுல் பிரசாத், அவரை காண்ட்சா சந்திப்பில் பார்த்ததாக தகவல் தெரிவித்தார். இதையடுத்து பூஜனை வீட்டிற்கு அழைத்து வந்தபோது, குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இது காவல்துறையையும் குழப்பத்தில் ஆழ்த்தியது.
செக்டர்-37 காவல் நிலைய பொறுப்பாளர் ஷாஹித் அகமது, இது குடும்ப உறுப்பினரின் தவறு என்றும், இறுதிச் சடங்கு செய்யப்பட்ட உடலின் அடையாளத்தை டி.என்.ஏ மூலம் கண்டறிய விசாரணை நடந்து வருவதாகவும் தெரிவித்தார். மேலும் விரைவில் உண்மை தெளிவாகும் என காவல்துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது.
