சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் இன்றும் உலகையே வியக்க வைக்கிறது. 1945-ஆம் ஆண்டு லாயிட் ஓல்சன் என்ற விவசாயி தனது பண்ணையில் ஒரு சேவலை வெட்டியபோது, அதன் தலை துண்டிக்கப்பட்டும் அந்தச் சேவல் சாகாமல் எழுந்து நடக்கத் தொடங்கியது.
மேலும் மூளையின் ஒரு சிறு பகுதி மற்றும் ஒரு காது சிதையாமல் இருந்ததால், அந்தச் சேவலால் உயிர்வாழ முடிந்தது. உரிமையாளர் லாயிட் ஓல்சன், ஒரு துளிசொட்டி மூலம் திரவ உணவையும் நீரையும் அதன் உணவுப்பாதையில் நேரடியாகச் செலுத்தி அதை மிகவும் கவனமாகப் பராமரித்து வந்தார்.
இந்த அதிசய சேவல் ‘மிராக்கிள் மைக்’ என்று அழைக்கப்பட்டது. தலை இல்லாத நிலையிலும் அது எடை அதிகரித்ததுடன், சுமார் 18 மாதங்கள் ஆரோக்கியமாக உயிர்வாழ்ந்தது. மைக் குறித்து காட்டுத்தீயாய் பரவிய தகவலால், அதன் உரிமையாளர் அமெரிக்கா முழுவதும் பல காட்சிகளை நடத்தினார்.
இதன் மூலம் அவர் அந்த காலத்தில் மாதத்திற்கு ஆயிரக்கணக்கான டாலர்களை சம்பாதித்து பெரும் கோடீஸ்வரரானார். இயற்கையின் விதிகளுக்குப் புறம்பாக இவ்வளவு காலம் உயிர்வாழ்ந்த இந்த சேவல், இன்றும் மருத்துவ மற்றும் அறிவியல் உலகிற்கு ஒரு தீராத மர்மமாகவே உள்ளது.
