வெயில் காலத்தின் நண்பனாகக் கருதப்படும் தர்பூசணி, தற்போது நவிமும்பை ஏபிஎம்சி சந்தையில் கிலோ வெறும் 5 முதல் 7 ரூபாய் வரை விற்கப்படும் அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
வழக்கமாக மொத்த விற்பனையில் 10 முதல் 35 ரூபாய் வரை விற்கப்படும் இந்த பழத்தின் தேவை, தற்போது 30 சதவீதம் சரிந்துள்ளது. இதற்குப் பின்னால் தென் மும்பையில் நடந்த ஒரு நெஞ்சை உலுக்கும் மர்ம மரணமே காரணமாகப் பார்க்கப்படுகிறது.
மும்பை பெண்டி பஜார் பகுதியைச் சேர்ந்த அப்துல்லா டோகாடியா (40) மற்றும் அவரது மனைவி, இரண்டு மகள்கள் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர், கடந்த சனிக்கிழமை இரவு வீட்டில் மீதமிருந்த தர்பூசணி பழத்தைச் சாப்பிட்டுவிட்டுத் தூங்கியுள்ளனர்.
மறுநாள் காலையில் அவர்களுக்குக் கடுமையான வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நால்வருமே சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்தத் தகவல் காட்டுத்தீயாய் பரவியதால், தர்பூசணி சாப்பிட்டதால்தான் அவர்கள் இறந்தார்கள் என மக்கள் அச்சமடைந்து பழங்களை வாங்குவதைத் தவிர்த்து வருகின்றனர்.
இருப்பினும், இந்த மரணங்களுக்குத் தர்பூசணிதான் காரணமா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. அவர்களின் உடலில் ஒருவித ‘பெயின்கில்லர்’ மருந்து போன்ற பொருள் கலந்திருப்பதாகக் கூறப்படும் நிலையில், உணவு பாதுகாப்புத் துறை (FDA) பிரியாணி, தண்ணீர், சிக்கன் என 11 மாதிரிகளைச் சேகரித்து ஆய்வுக்கு அனுப்பியுள்ளது.
“தர்பூசணியால் மட்டும் இப்படி ஒரு மரணம் நிகழ வாய்ப்பில்லை, வதந்திகளை நம்ப வேண்டாம்” என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒருபுறம் மர்ம மரணங்கள் குறித்த விசாரணை ஒருபுறம் நடந்தாலும், மறுபுறம் வியாபாரிகளும் விவசாயிகளும் பெரும் நஷ்டத்தைச் சந்தித்து வருகின்றனர்.
