
சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த வெள்ளிக்கிழமை இரவு படுகொலை செய்யப்பட்ட நிலையில் அவருடைய உடல் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவருடைய உடல் இன்று பெரம்பூரில் உள்ள மாநகராட்சி பந்தர் கார்டன் பள்ளியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். அதன் பின் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அவர் பேசியதாவது, ஆம்ஸ்ட்ராங் மறைந்த செய்தியை கேட்டு மிகவும் வருத்தம் அடைந்தேன். புத்தர் காட்டிய மனிதாபிமான பாதையில் மிகவும் அர்ப்பணிப்புடன் தன்னுடைய வேலையை செய்தவர். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. எனவே சட்டம் ஒழுங்கை சீர்படுத்த நடவடிக்கை எடுப்பதோடு பிற்படுத்தப்பட்ட மற்றும் ஏழை எளிய மக்களின் நலன்களை பாதுகாக்க வேண்டும். ஆம்ஸ்ட்ராங் அவருடைய வீட்டின் அருகிலேயே படுகொலை செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கில் உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. இந்த சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகளை பிடிக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்திருந்தால் இதற்குள் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடித்திருக்க முடியும். உண்மையான குற்றவாளிகள் யார் என்பதை கண்டுபிடித்து தமிழக அரசு எங்களுக்கு நியாயம் வழங்க வேண்டும். மேலும் இந்த வழக்கை சிபிஐ வசம் தமிழக அரசு ஒப்படைக்க வேண்டும் என்று கூறினார்.