நெல்லையில் நடைபெற்ற பாஜக பூத் கமிட்டி மாநாட்டில் மத்திய அமைச்சர் அமித்ஷா, “வருகிற தேர்தலில் திமுக அரசை வேரோடு அகற்றுவோம்” என்று கூறியிருந்தார். இதுகுறித்து புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி, “மு.க.ஸ்டாலின் முதல்வராக முடியாது என முன்பு கூறியவர்களையே தவிடுபொடியாக்கி  நிரூபித்து இன்று அவர் வெற்றிகரமாக முதல்வராக உள்ளார்.

அதுபோல் நாளைய தமிழக முதல்வராக உதயநிதி ஸ்டாலின் நிச்சயமாக வருவார் என்பதில் சந்தேகமே இல்லை” என்று தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது: “திமுகவின் வேரை யாராலும் அசைக்க முடியாது. அது எங்கே இருக்கிறது என்று கூட யாருக்கும் தெரியாது, ஏனெனில் அது ஆழமாக பாய்ந்துள்ளது. எனவே திமுகவின் வேரை அமித்ஷா கண்டுபிடிக்க கூட முடியாது. 30 நாட்கள் சிறையில் இருந்தால் பதவி பறிக்கப்படும் என்கிற சட்டம் நிறைவேறாது. நிறைவேறினாலும் நீதிமன்றத்தில் சட்ட ரீதியான வழக்குகள் தொடரப்பட்டு முறியடிக்கப்படும்” என்றார்.

அமித்ஷா கூறிய “வாக்கு சதவீத அடிப்படையில் அதிமுக–பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும்” என்ற கூற்றிற்கு பதிலளித்த அவர், “தமிழகத்தின் நிலவரம் அவருக்குத் தெரியாது. அகில இந்திய நிலவரம் வேறு, தமிழக நிலவரம் வேறு. இதை மீண்டும் நிரூபிக்கும் வகையில் 2026 தேர்தலில் மக்கள் தங்களின் தீர்ப்பை அளித்து பாடம் புகட்டுவார்கள்” என்று வலியுறுத்தினார்.