தமிழக வெற்றிக் கழகத்திற்கு இந்தியத் தேர்தல் ஆணையம் ‘விசில்’ சின்னத்தை அதிகாரப்பூர்வமாக ஒதுக்கியுள்ளது. 2026 தமிழக அரசியல் களத்தில் இது புதிய சகாப்தத்தைப் படைக்கும் என அக்கட்சியின் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ‘எக்ஸ்’  தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நமது தமிழக வெற்றிக் கழகத்திற்கு இந்தியத் தேர்தல் ஆணையம் ‘விசில்’ சின்னத்தை வழங்கியுள்ளது. வரவிருக்கும் 2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம், நாம் வாகை சூடப்போகும் களமாகவும், வரலாறு திரும்பப்போகும் களமாகவும் அமையும். கழகத் தலைவரும், முதல்-அமைச்சர் வேட்பாளருமான அண்ணன் விஜய்யின் வெற்றிச் சின்னமான ‘விசில்’, தமிழக அரசியலில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

தமிழக வெற்றிக் கழகத் தோழர்கள், சமூக வலைத்தளங்கள் தொடங்கி சுவர் விளம்பரங்கள் வரை நமது வெற்றிச் சின்னத்தை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்கும் பணிகளை இன்றிலிருந்தே தீவிரமாக முன்னெடுக்க வேண்டும். இந்தப் பணிகளில் ஈடுபடும்போது, தேர்தல் ஆணையம் நமக்கு ஒதுக்கியுள்ள அதிகாரப்பூர்வ சின்னத்தின் அதே வடிவத்தை மட்டும் அனைத்துத் தோழர்களும் ஒருமித்த நிலையில் பயன்படுத்த வேண்டும்.

மாற்றத்திற்கான விசில் சத்தம் மாநிலம் முழுவதும் ஒலிக்கட்டும். அந்த ஒலியின் வாயிலாக மக்களுக்கான நமது புதிய அரசு பிறக்கட்டும் என அந்தப் பதிவில் ஆதவ் அர்ஜுனா குறிப்பிட்டுள்ளார்.