தமிழ்நாட்டில் திருமணங்களைப் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், காதல் மற்றும் சாதி மறுப்பு திருமணங்களைப் பதிவு செய்வதில் மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு சார் பதிவாளர் அலுவலகங்களில் மணமக்களுக்குப் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு அரசின் 2009 திருமண பதிவுச் சட்டத்தின்படி, திருமணப் பதிவிற்கு மூன்று சாட்சிகள் இருந்தால் போதுமானது; அவர்கள் ரத்த உறவாகவோ அல்லது பெற்றோராகவோ இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால், பல அலுவலகங்களில் பெற்றோர் நேரில் வந்து ஒப்புதல் தர வேண்டும் என அதிகாரிகள் கட்டாயப்படுத்துவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

​பெரும்பாலான காதல் மற்றும் சாதி மறுப்புத் திருமணங்கள் பெற்றோரின் சம்மதமின்றி நடக்கும் நிலையில், இந்தத் தடையைப் பயன்படுத்திப் பல சார் பதிவாளர் அலுவலக ஊழியர்கள் லஞ்சம் வாங்குவதற்குக் குறுக்கு வழியைக் கண்டுபிடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. பெற்றோரை அழைக்க முடியாத தவிப்பில் இருக்கும் ஜோடிகளிடம் பெருந்தொகை லஞ்சமாகப் பெறப்பட்டுத் திருமணங்கள் பதிவு செய்யப்படுவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கடந்த 2017-ல் போடப்பட்ட ஒரு சுற்றறிக்கையைக் காட்டி இப்போதும் அதிகாரிகள் அலைக்கழித்து வருகின்றனர். எனவே, காதல் திருமணங்களுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் இந்த நடைமுறைகளை உடனடியாக நீக்கி, முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசு அதிரடி உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.