தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி நேற்று ராஜ்பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது, தமிழ்நாடு என்று சொல்வதைவிட தமிழகம் என்று சொல்வதே சரியாக இருக்கும். பொய் பரப்புரையை முறியடித்து எது உண்மை என்பதை நாம் மக்களுக்கு நிரூபித்துக் காட்ட வேண்டும். பிரதமர் நரேந்திர மோடியின் நோக்கம் நாட்டிலுள்ள அனைவரும் ஒரே குடும்பம், அனைவரும் குடும்ப உறுப்பினர்கள் என்பதாகும்.

ஆங்கிலேயர் காலத்தில் இந்தியாவில் மாநிலங்கள் உருவாக்கப்பட்ட நிலையில், பாரதத்தின் ஒரு பகுதியே தமிழகம். எனவே தமிழ்நாடு என்ற வார்த்தையை விட தமிழகம் என்ற வார்த்தை தான் சரியான முறையில் இருக்கும் என்று கூறினார். ஆளுநரின் இந்த பேச்சு தற்போது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில், ஆளுநர் ஆர்.என் ரவிக்கு அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். அதோடு டுவிட்டரில் தமிழ்நாடு என்ற வார்த்தையும் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

இந்நிலையில் ஆளுநர் ஆர்.என். ரவியின் கருத்துக்கு தற்போது புதுவை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் ஆதரவு தெரிவித்துள்ளார். இது குறித்து தமிழிசை சௌந்தர்ராஜன் கூறியதாவது, தற்போது பிரிவினைவாத கருத்துகள் அதிகமாக வருவதால், தமிழ்நாட்டை தமிழகம் என அழைக்க வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார். ஆளுநர் ரவி கூறிய கருத்தின் உட்பொருளை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ்நாட்டை தனி நாடு என்று அர்த்தத்தில் கருதக்கூடாது என்பதற்காகத்தான் ஆளுநர் அப்படி சொல்லியுள்ளார் என்று கூறியுள்ளார்.