கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் அரசுப் பேருந்துகளில் “அரசுப் போக்குவரத்துக் கழகம்” என்று மட்டுமே பெயர்கள் எழுதப்பட்டிருந்த நிலையில், தற்போது புதிய முதலமைச்சர் விஜய் அவர்கள் பதவியேற்ற பிறகு அந்தப் பெயர்கள் அதிரடியாக “தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்” என்று மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அரசுப் பேருந்துகளில் “தமிழ்நாடு” என்ற பெயரைத் தனியாகச் சேர்க்க வேண்டும் என்று பல தரப்பிலிருந்தும் நீண்ட காலமாகப் பலத்த கோரிக்கைகள் வைக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், தற்போது அமைந்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய ஆட்சியில் இந்த அதிரடி மாற்றம் உடனடியாகக் கொண்டுவரப்பட்டுள்ளனாக காணொளி ஒன்று வைரலாகி வருகிறது.

அவ்வகையில் அரசுப் பேருந்துகளின் முன்பக்கம் இருக்கும் டிஜிட்டல் போர்டில் “தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்” என்று டிஜிட்டலாகப் பெயர் ஓடும் புதிய வீடியோ காட்சிகள் தற்போது எக்ஸ் (X) சோசியல் மீடியா தளத்தில் தீயாய் பரவி வருகிறது. “பதவிக்கு வந்த சில நாட்களிலேயே மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை டிஜிட்டல் போர்டில் மாற்றி முதலமைச்சர் விஜய் நிறைவேற்றியுள்ளார்” என்று த.வெ.க-வினர் இந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.