தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் முத்திரை பதிக்கும் திட்டங்கள் தொடர்பாக ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் இறையன்பு, அரசு உயர் அதிகாரிகள் மற்றும் அரசு துறை செயலாளர்கள் போன்றோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தின் போது முத்திரை பதிக்கும் திட்டங்கள் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் அதிகாரிகளுக்கு பல்வேறு விதமான ஆலோசனைகளை வழங்கினார். அவர் அரசின் திட்டங்களை மக்களிடம் சரியான முறையில் கொண்டு சேர்ப்பது அரசு அதிகாரிகளின் கடமை. திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை சரியான முறையில் பயன்படுத்தி திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

ஒவ்வொரு செயலாளரும் தங்கள் துறையின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் தொடர்பாக விளக்கமாக கூறியுள்ளீர்கள். இதை நீங்கள் சிறப்பான முறையில் நிறைவேற்றுவீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. அரசின் திட்டங்களை குறிப்பிட்ட கால நேரத்திற்குள் செயல்படுத்த வேண்டும். பெரிய நன்மை அளிக்கும் திட்டங்களை அறை குறையாக செயல்படுத்துவது பயனளிக்காமல் போய்விடும். எனவே திட்டங்களை மிகுந்த கவனத்துடன் செயல்படுத்த வேண்டும். மேலும் சில இடங்களில் திட்டங்களை செயல்படுத்துவதில் தொய்வு இருப்பதால், அந்த திட்டங்களை நிறைவேற்றுவதற்கு எந்த அளவுக்கு காலம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதோ அந்த காலத்துக்குள் முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்று கூறினார்.