தமிழக முதலமைச்சராக சி. ஜோசப் விஜய் அவர்கள் பதவியேற்ற விழாவில், மரபுகள் மீறப்பட்டதாகக் கூறி திமுக தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. பொதுவாகத் தமிழக அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்தே முன்னிலைப்படுத்தப்படும் நிலையில், இந்த விழாவில் முதலாவதாக ‘வந்தே மாதரம்’ பாடலும், இரண்டாவதாகத் தேசிய கீதமும் பாடப்பட்டு, மூன்றாவதாகவே ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ பாடப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்துள்ள திமுக, “மேற்கு வங்கத்தில் பாஜக அரியணை ஏறியபோது கூட அங்கு வந்தே மாதரம் ஒலிக்கவில்லை, ஆனால் தமிழ்நாட்டில் தமிழர்களின் உயிர் மூச்சான தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாம் பட்சமாக நிறுத்தியுள்ளனர்” எனச் சாடியுள்ளது.

​மேலும், “ஊரெல்லாம் கூவிய மாற்றம் என்பது தமிழை அவமதிப்பது தானா?” என்று கேள்வி எழுப்பியுள்ள திமுக, முதல் நாளிலேயே தமிழ்த்தாய்க்கு நேர்ந்த இந்த இழிவு ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் நேர்ந்த அவமானம் என அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழகத்தின் மரபுகளைச் சிதைத்து, தமிழைப் பின்னுக்குத் தள்ளுவது புதிய அரசின் செயல்பாடா என அரசியல் வட்டாரத்தில் காரசாரமான விவாதங்கள் எழுந்துள்ளன. விஜய்யின் பதவியேற்பு விழாவில் நடந்த இந்தச் சம்பவம், தற்போது சமூக வலைதளங்களில் ஆதரவாகவும் எதிராகவும் மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியுள்ளது.