கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்குவதால் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதான கட்சி தலைவர்கள் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் தமிழர்கள் உள்ள சிவமோகா பகுதியில் பா.ஜ.க முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போன்றோர் வாக்கு சேகரிக்க சென்றனர். சிவமோகாவில் லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் பல தலைமுறைகளாக வாழ்ந்து வருகின்றனர்.

சிவமோகா தமிழ்சங்கம் புலம்பெயர்ந்த கன்னட தமிழர்கள் இடையில் பிரபலமான தமிழ் சங்கமாக விளங்கி வருகிறது. இதற்கிடையில் வருகிற சட்டமன்ற தேர்தலில் தமிழர்களின் ஆதரவை பெறுவதற்கு சிவமோகா நகரில் தமிழர்களை வைத்து ஆதரவு பிரச்சார கூட்டம் பா.ஜ.க கட்சி சார்பாக நடத்தப்பட்டது. இந்நிலையில் அங்கு தமிழர்கள் அதிகம் இருந்த காரணத்தால் மேடையில் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிபரப்பப்பட்டு திடீரென்று பாதியில் நிறுத்தப்பட்டது.

இச்சம்பவத்திற்கு நாடு முழுவதும்ம் உள்ள தமிழ் ஆர்வலர்கள் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் தஞ்சையில் ஜோதி அறக்கட்டளை சார்பாக “எட்டுத்திக்கும் பரவட்டும் தமிழ்த்தாய் வாழ்த்து” எனும் தலைப்பில் கோலப் போட்டி நடத்தப்பட்டது. இவ்வாறு கர்நாடகாவில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டதற்கு தஞ்சையில் கோலப்போட்டி வாயிலாக நூதன முறையில் மொழியுணர்வு மூலம் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினார்கள்.