தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களுக்குக் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்கவும், 21 வயதுக்குட்பட்டவர்களுக்கு மது விற்பனை செய்யப்படுவதைக் கண்காணிக்கவும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை ஆணையர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதுமட்டுமன்றி, சட்டவிரோத பார்கள் மற்றும் பெட்டிக்கடைகளில் நடக்கும் கள்ளச்சந்தை மது விற்பனையை முடக்கவும், பள்ளி, கல்லூரிகள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகே தீவிர சோதனைகளை நடத்தவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரயில்கள் மூலம் கடத்தப்படும் மதுபானங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க ரயில்வே போலீசாருடன் இணைந்து கூட்டு நடவடிக்கை எடுக்கவும் இந்த உத்தரவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அரசு நிர்ணயித்த விலையைத் தாண்டி கூடுதல் காசு வாங்கும் விற்பனையாளர்கள் மீதும், விதிமுறைகளை மீறும் பார்கள் மீதும் இனி சட்டப்படியான சாட்டையடி நடவடிக்கை பாயும் என்பதால் தற்போதைய மதுவிற்பனை வட்டாரங்களில் இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.