சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தென்னிந்தியப் பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் தாக்கமாக இன்று (ஜூலை 21) தமிழகத்தின் சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனுடன், ஓரிரு இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த தரைக்காற்று வீசக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மழையுடன் கூடிய வானிலை நிலவக்கூடிய பகுதிகளில் நீலகிரி, தென்காசி, தேனி மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் அடங்கும். இங்கு ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இந்நிலையில், அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸாகவும் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கான முக்கிய எச்சரிக்கை:

ஜூலை 20 முதல் ஜூலை 22 வரை தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடலில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என எச்சரிக்கையிடப்பட்டுள்ளது. மேலும், ஜூலை 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் வட தமிழக கடலோரப் பகுதிகளிலும் அதே மாதிரியான சூறாவளிக்காற்று வீச வாய்ப்பு உள்ளதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.