தமிழ்நாட்டில் உள்ள 52 முக்கியக் கோயில்களில் செல்போன் பயன்பாட்டிற்குத் தடை விதிக்கப்பட்டு, அதனைப் பாதுகாப்பாக வைப்பதற்காக லாக்கரில் ரூ.5 கட்டணம் வசூலிக்கப்படும் விவகாரம் தற்போது பொதுமக்களிடையே விவாதிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து எழுந்த பல்வேறு விமர்சனங்களுக்கும், கேள்விகளுக்கும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் செய்தியாளர்களைச் சந்தித்து விரிவான விளக்கமளித்துள்ளார்.
செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் கூறியதாவது, கோயில்களில் செல்போன் பயன்பாட்டிற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதும், கட்டணம் வசூலிக்கப்படுவதும் புதிதாக அமல்படுத்தப்பட்ட நடைமுறை கிடையாது என்றார். மதுரை உயர்நீதிமன்ற கிளையில் திருச்செந்தூர் கோயிலில் செல்போன் கொண்டு செல்லத் தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில், கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பர் மாதமே தமிழ்நாடு முழுவதும் உள்ள கோயில்களில் செல்போன் கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டதாக அவர் குறிப்பிட்டார். அதோடு பணியாளர்களின் சம்பளம் உள்ளிட்ட செலவினங்களுக்காகவும் 5 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
அன்றைய காலகட்டத்திலிருந்தே பெரும்பாலான கோயில்களில் செல்போன் கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டு, பாதுகாப்பிற்காக கவுண்டர்கள் அமைக்கப்பட்டு ரூ.5 கட்டணம் வசூலிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். சில குறிப்பிட்ட 52 முக்கியக் கோயில்களில் மட்டும் அப்போது இதுபோன்ற கவுண்டர்கள் இல்லாததால், தற்போது அங்கு இந்த ஏற்பாடு கொண்டுவரப்பட்டுள்ளதாகக் கூறினார்.
மேலும், கோயில்களில் செல்போன் தடையால் பொதுமக்களுக்கு எந்தவித சிரமமும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். மக்கள் வெகுநேரம் வரிசையில் காத்துநிற்கும் சூழல் உருவாகக் கூடாது என்றும், இந்த நடைமுறை மக்களுக்கு ஒருபோதும் பாரமாக மாறிவிடக் கூடாது என்றும் அனைத்துக் கோயில்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். குறிப்பாக, கர்ப்பிணிகள், முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இந்தக் செல்போன் கட்டுப்பாடு எந்த விதத்திலும் பொருந்தாது என்று தெளிவுபடுத்தினார்.
கோயில்களின் நிர்வாகம் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கக் கூடாது என விரும்புபவர்கள்தான் இதுதொடர்பாகத் தவறான தகவல்களைப் பரப்பி வருவதாகக் குற்றம் சாட்டிய அவர், கோயில்களின் நிதிநிலையைக் கருத்தில் கொண்டு ரூ.5 கட்டணம் வசூலிக்கலாமா வேண்டாமா என்பதை அந்தந்தக் கோயில்களே சுயமாக முடிவு செய்துகொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். ஆன்மீகத் தலங்களை அரசியல் செய்யும் இடமாக மாற்றக் கூடாது என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
பக்தர்களுக்கு ஒரு சிறந்த ஆன்மீக அனுபவத்தைத் வழங்குவதற்காகவே இந்தத் தடை அமல்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். வரலாற்றுச் சிறப்புமிக்க நமது கோயில்களுக்குச் செல்லும்போது அங்குள்ள பல பொக்கிஷமான தமிழ்க் கல்வெட்டுகளையும், தொன்மையான எழுத்துகளையும் பக்தர்கள் பார்த்து ரசிக்க வேண்டும்; செல்போன் பயன்பாடு இதற்குத் தடையாக இருப்பதால் மட்டுமே நீதிமன்ற உத்தரவு முழுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
மேலும், பாஜக ஆளும் மாநிலங்களின் கோயில்களிலும் செல்போன்கள் எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது என்பதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், இந்த விவகாரத்தை வைத்து யாரும் அரசியல் செய்ய வேண்டாம் எனத் கேட்டுக்கொண்டார். ஒருவேளை இதனால் பக்தர்களுக்கு நடைமுறையில் ஏதேனும் சிரமங்கள் இருந்தால், அதுகுறித்து பரிசீலித்து நிச்சயமாகத் தகுந்த மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும், கூட்டம் அதிகமாகக் கூடும் சிறப்பு நாட்களில் செல்போன் கவுண்டர்களில் பக்தர்களைத் தவிர்க்குமாறு கோயில்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
