தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் முதல் முறையாக மதுரையில் உள்ள பள்ளியில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன்பிறகு தமிழக முழுவதும் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் காலை சிற்றுண்டி திட்டம் அமலுக்கு வந்தது. இந்த திட்டத்தில் சமையல் பணிகளை செய்வதற்கு சுய உதவி குழு உறுப்பினர்களை அரசே நியமனம் செய்வது வழக்கம். தற்போது அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

அதன்படி அனைத்து பள்ளிகளிலும் ஊராட்சி,ஒன்றியம் மற்றும் பேரூராட்சியில் உள்ள சுய உதவிக் குழு உறுப்பினர்களை உணவு தயார் செய்யும் பணிக்கு தேர்வு செய்ய வேண்டும். பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு மேல் கல்வி தகுதி கொண்டவராகவும் உணவு தயாரிப்பில் ஆர்வம் கொண்டவராகவும் இருக்க வேண்டும். ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்திருக்கும் அந்தப் பகுதியில் வசிப்பவராக இருக்க வேண்டும். அவர் சுய உதவி குழுவில் தொடர்ந்து மூன்று வருடங்களாக உறுப்பினராக இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் நபர்கள் தன்னுடைய பெயரில் ஆண்ட்ராய்டு போன் அல்லது ஸ்மார்ட் போன் வைத்திருப்பவராக இருக்க வேண்டும். காலை உணவு தயார் செய்யும் பள்ளியில் தன்னுடைய குழந்தைகள் யாராவது படிப்பவராக இருக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.