
தமிழக முதல்வர் ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக நியமித்து நேற்று அறிவிப்பு வெளியிட்டார். அவர் இன்று மாலை 3:30 மணியளவில் ஆளுநர் மாளிகையில் துணை முதல்வராக பதவி ஏற்க இருக்கிறார்.இந்நிலையில் தமிழக அரசியல் வரலாற்றில் துணை முதல்வராக பொறுப்பேற்கும் 3-வது நபர் உதயநிதி ஸ்டாலின் தான்.

அதிமுக ஆட்சிக்காலத்தின் போது எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்த சமயத்தில் ஓ பன்னீர் செல்வத்திற்கு துணை முதல்வர் பதவி ஒதுக்கப்பட்டது. தற்போது மூன்றாவது நபராக உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக திமுக ஆட்சிக்காலத்தில் பொறுப்பேற்க இருக்கிறார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் துணை முதல்வர் பொறுப்பு குறித்து வெளிப்படையாக எதுவும் தெரிவிக்கவில்லை. கேபினட் அமைச்சருக்கு இணையாக மதிக்கப்படக்கூடிய பொறுப்பாக துணை முதல்வர் பதவி என்பது இருக்கிறது.
இந்தியாவின் முதல் முறையாக துணை முதல்வராக பொறுப்பேற்றவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அனுராக் நாராயணன் சின்ஹா. அவர் கடந்த 1937 ஆம் ஆண்டு முதல் 1939 வரையிலும், கடந்த 1946 ஆம் ஆண்டு முதல் 1952 வரையிலும் பீகாரின் துணை முதல்வராக பொறுப்பேற்று இருக்கிறார்.
இதே போன்று ஆந்திராவில் நீலம் சஞ்சீவ ரெட்டி, மேற்கு வங்கத்தின் ஜோதிபாசு, கர்நாடக மாநிலத்தில் சித்தராமையா, எடியூரப்பா, பீகார் மாநிலத்தில் சுசில் குமார் மோடி ஆகியோரும் துணை முதல்வர் பதவி வகித்துள்ளனர்.
மேலும் தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் முதன்முறையாக மு.க ஸ்டாலின் தான் துணை பொறுப்பேற்றார். அவருக்கு அடுத்தபடியாக அதிமுக ஆட்சியில் ஓ. பன்னீர்செல்வம் துணை முதல்வராக நியமிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து மூன்றாவது நபராக உதயநிதி ஸ்டாலின் தான் துணை முதல்வராக பொறுப்பேறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.