தமிழக அமைச்சரவையில் பட்டியலினத்தைச் சேர்ந்த 7 பேர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றிருப்பது தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியமான மைல்கல் என்று சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் வரவேற்றுள்ளார். சென்னை கிண்டி மக்கள் மாளிகையில் நடைபெற்ற புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில், முதலமைச்சர் ஜோசப் விஜய் முன்னிலையில், பொறுப்பு ஆளுநர் அர்லேக்கர் அமைச்சர்களுக்குப் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த நிகழ்வின் போது செய்தியாளர்களிடம் பேசிய சண்முகம், பட்டியலினத்தவர்களுக்கு அமைச்சரவையில் இவ்வாறு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும், இது வரவேற்கத்தக்க மாற்றம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளையில், அரசியல் ரீதியாகத் தனது கடுமையான நிலைப்பாட்டையும் அவர் வெளிப்படுத்தினார். அமைச்சரவையில் அதிமுகவிற்கு ஏதேனும் வாய்ப்புகள் வழங்கப்பட்டால், தங்களது ஆதரவை மறுபரிசீலனை செய்ய நேரிடும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
மேலும், ஆளுநர் பங்கேற்கும் அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடல் முதலில் பாடப்படுவது குறித்த வினாவுக்குப் பதிலளித்த அவர், இது குறித்து முதலமைச்சரிடம் கேட்டபோது, மத்திய அரசின் உத்தரவின்படி ஆளுநர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் முதலில் பாடப்படும் என்று முதலமைச்சர் விளக்கம் அளித்ததாகத் தெரிவித்தார்.
