மயிலாடுதுறை மாவட்டத்தில் சமீபத்தில் சாராய வியாபாரிகளால் இரண்டு கல்லூரி மாணவர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள முட்டம் பகுதியில் மூவேந்தன், தங்கதுரை மற்றும் ராஜ்குமார் ஆகியோர் தொடர்ந்து சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்த நிலையில் இது தொடர்பாக போலீசுக்கு தகவல் தெரிவிப்பவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து வந்தனர். இதில் ராஜ்குமார் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே வந்த நிலையில் அந்த பகுதியைச் சேர்ந்த ஒரு 17 வயது சிறுவனை அவர்கள் அடித்தனர். இதனை ஹரிஷ் என்ற 25 வயது வாலிபர் தட்டி கேட்ட அவரை வெட்டி படுகொலை செய்தனர்.
இதனை தடுக்க வந்த இன்ஜினியரிங் கல்லூரி மாணவரான கரி ஷக்தி என்ற 20 வயது வாலிபரையும் அவர்கள் வெட்டி கொன்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சாராய வியாபாரிகள் மூவரையும் போலீசார் கைது செய்தனர். அதன் பிறகு போலீசார் நடத்திய விசாரணையில் முன் பகை காரணமாக ஹரிஷை கொலை செய்ததாகவும் அதனை தடுக்க வந்ததால் ஹரி சக்தியையும் அவர்கள் கொலை செய்ததாகவும் தெரிவித்தனர்.
இந்த கொலை முன் விரோதம் காரணமாக நடந்ததாக போலீசார் தெரிவித்த போதிலும் எதிர்கட்சிகள் அதனை ஏற்க மறுத்து ஆளும் அரசை விமர்சித்தது. இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் காவல் நிலைய போலீசார் அனைவரையும் தற்போது இடமாற்றம் செய்துள்ளனர். ஏற்கனவே காவல் ஆய்வாளர் நாகவல்லி இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்த போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரியும் அனைத்து காவலர்களையும் இடமாற்றம் செய்துள்ளனர். மேலும் இந்த இரட்டை படுகொலை சம்பவத்தின் எதிரொலியாக தான் அனைத்து போலீசாரையும் இடமாற்றம் செய்துள்ளனர்.
