தமிழகத்தையே உலுக்கிய தூத்துக்குடி சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில், இன்று (ஏப்ரல் 2) மதுரை மாவட்ட நீதிமன்றம் மிக முக்கியமான தீர்ப்பை வழங்கவுள்ளது.

கடந்த 2020-ம் ஆண்டு ஊரடங்கு காலத்தில் கைதான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் போலீஸ் விசாரணையின் போது கொடூரமாகத் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த மதுரை முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றம், கடந்த மார்ச் 23-ம் தேதி முன்னாள் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 9 போலீஸ்காரர்களையும் ‘குற்றவாளிகள்’ என உறுதி செய்தது.

இவர்களுக்கான தண்டனை விவரங்கள் கடந்த மார்ச் 30-ம் தேதியே அறிவிக்கப்பட வேண்டிய நிலையில், மத்திய மற்றும் மாநில அரசுகளின் விரிவான அறிக்கைக்காகக் காத்திருந்த நீதிபதி முத்துகுமரன், வழக்கினை இன்றைய தினத்திற்கு ஒத்திவைத்தார்.

இன்று சி.பி.ஐ மற்றும் தமிழக அரசு சார்பில் அறிக்கைகள் தாக்கல் செய்யப்படும் பட்சத்தில், குற்றவாளிகளுக்கான தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படும் என்பதால் நீதிமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.