தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடிவடைந்த நிலையில்  பல்வேறு இடங்களில் பனிமூட்டம் காணப்படுகிறது. குறிப்பாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் காலை 8 மணி வரையிலும் பனிமூட்டம் நிலவுகிறது. அதேபோன்று தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் காலை நேரத்தில் பனிமூட்டம் நிலவுவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிறார்கள். இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் 2 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கலாம் என்று தற்போது தெரிவித்துள்ளது.

அதன்படி, தமிழ்நாட்டில் இன்று மற்றும் நாளை இயல்பைவிட வெப்பநிலை அதிகரித்து காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரித்து காணப்படும். மேலும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்று மற்றும் நாளை வறண்ட  வானிலையே நிலவக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.