அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று அவருடைய நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், திராவிட இயக்கத்தை தமிழக அரசியலில் காலூன்ற செய்து ஏழை எளிய மக்களை  அனைத்து நிலைகளிலும் சம நீதியை பெற வேண்டும் என்று பேரறிஞர் அண்ணா எடுத்த முயற்சியின் பலனாகத்தான் 1967 ஆம் ஆண்டு தமிழகத்தில் அண்ணா ஆட்சி மலர்ந்தது. பிறகு அண்ணாவின் கொள்கை கோட்பாடுகளை எம்ஜிஆர் தமிழகத்தில் வேரூன்ற செய்து மூன்று முறை தொடர்ந்து முதல்வராக பதவி வகித்து மக்களுக்கு சேவை செய்ய தன் வாழ்க்கையை அர்ப்பணித்தார்.

அவரைப்போல ஜெயலலிதா ஆறு முறை முதல்வராக பதவி வகித்து மக்களுக்கான பல நலத்திட்டங்களை செயல்படுத்தினார். அண்ணாவின் வழியில் பயணித்து மீண்டும் ஜெயலலிதா ஆட்சியை தமிழகத்தில் மலர செய்வதற்கு தமிழக மக்களும் அதிமுக சக்திகளும் மீண்டும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று உறுதி ஏற்போம். 2026 ஆம் ஆண்டு திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்ற ஸ்டாலின் கனவு பலிக்காது. தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு அதிமுக தான் மீண்டும் மலரும் என ஓபிஎஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.