பிளஸ் 1, பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பிற்கான பொது தேர்வுகள் வருகிற மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த தேர்வுகளில் தனி தேர்வர்களாக பங்கேற்பவர்கள் மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசு தேர்வு இயக்கத்தின் சேவை மையங்களில் கடந்த டிசம்பர் 26 -ஆம் தேதி முதல் இணைய வழியில் விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தனித் தேர்வர்களுக்கான கால அவகாசம் செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைய உள்ளது.

அதனால் இதுவரை விண்ணப்பிக்காத தேர்வர்கள் திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய இரண்டு நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள அரசு தேர்வு துறை சேவை மையங்களுக்கு சென்று விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேற்கு குறிப்பிடப்பட்டுள்ள நாட்களில் விண்ணப்பிக்க தவறியவர்கள் சிறப்பு அனுமதி முறையில் வருகிற ஜனவரி 5 முதல் 7-ஆம் தேதி வரை உரிய தேர்வு கட்டணத்துடன் மேல்நிலைப் படிப்பு என்றால் கூடுதலாக  ரூ.1,000, பத்தாம் வகுப்பு ரூ.500 சிறப்பு கட்டணமாக செலுத்தி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

மேலும் மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள தேர்வு துறை இ -சேவை மையங்களின் விளம்பரங்கள் மற்றும் ஆன்லைனில் விண்ணப்பம் பதிவு செய்வது குறித்த தகவல்களை www.dge1.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.  அரசு தேர்வுகள் இயக்ககம் கூறியதாவது, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்கள் மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகங்கள் மற்றும் அரசு தேர்வு உதவி இயக்குனர் அலுவலகங்களிலும் விவரங்கள் பெற்றுக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.