உலகம் முழுவதும் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. தமிழகத்திலும் கடந்த இரண்டு வருடங்களில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்ததை தொடர்ந்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஒப்பந்த முறையில் சுமார் 2300 -க்கும் மேற்பட்ட செவிலியர்கள் அரசு மருத்துவமனைகளில் பணியமர்த்தப்பட்டனர். இவர்களின் பனிக்கால ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில் ஒப்பந்தம் நீட்டிப்பு இல்லை என கடந்த சனிக்கிழமை தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. இதற்கு ஒப்பந்த செவிலியர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மக்கள் நல வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது, பணி நீடிப்பு பெறாத ஒப்பந்த செவிலியர்களுக்கு மாற்றுப் பணி வழங்கப்படும் என கூறியுள்ளார். மேலும் மக்களை தேடி மருத்துவம், ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாற்றுப் பணி வழங்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர்கள் தலைமையிலான குழு ஒப்பந்த செவிலியர்களை தேர்வு செய்து பணி வழங்கும். அதனால் தற்போது செவிலியர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். இதனை தொடர்ந்து பேசிய அவர், வெளிநாட்டிலிருந்து தமிழகம் வந்தவர்களில் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த 13 பேரில் யாருக்கும் பிஎப் 7 தொற்று பாதிப்பு இல்லை என தெரிவித்துள்ளார்.