தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கடுமையான மின்வெட்டு ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

மின் தடையால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பல இடங்களில் மின்வாரிய அலுவலகங்களை முற்றுகையிட்டு தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த விவகாரம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், மக்களின் இந்த தொடர் போராட்டங்களே மின்வெட்டுப் பிரச்சினையின் தீவிரத்தை காட்டுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, தமிழக அரசு உடனடியாக தலையிட்டு இந்த மின்வெட்டுப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும், மின் தடை இல்லாத நிலையை உருவாக்க ஒரு உறுதியான செயல்திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.