புதுக்கோட்டை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ரங்கம்மாள் சத்திரம் பகுதி, நேற்று காலை வழக்கம்போலத்தான் விடிந்தது. ஆனால், அந்த காலைப் பொழுதில் நடந்த ஒரு சம்பவம் ஒட்டுமொத்த கிராமத்தையே உலுக்கிப் போட்டது. கல்வி கற்க வேண்டும் என்ற லட்சியத்தோடு வீட்டைவிட்டுப் புறப்பட்ட பிஞ்சு உள்ளங்கள், பேருந்து நடத்துநரின் கோர முகத்திற்கு ஆளாகி மருத்துவமனை படுக்கையில் தள்ளப்பட்ட சோகம் அரங்கேறியுள்ளது.

அங்குள்ள அரசுப் பள்ளிகளுக்குச் செல்லவதற்காக, 10-க்கும் மேற்பட்ட பழங்குடியின மாணவிகள் வழக்கம் போல் சாலையோரத்தில் காத்திருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த அரசு பேருந்து வந்து நின்றதும், மிகுந்த உற்சாகத்தோடு மாணவிகள் அதில் ஏறினர். ஆனால், கல்வி கற்க ஆசையோடு ஏறிய அந்த ஏழைச் சிறார்களுக்கு காத்திருந்தது கொடூரமான அனுபவம்.

பேருந்து சற்று தூரம் சென்றதும், உள்ளே கூட்டம் அதிகமாக இருப்பதாகக் கூறி நடத்துநர் திடீரென ஆக்ரோஷமடைந்துள்ளார். “யாரும் ஏறக் கூடாது, கீழே இறங்குங்கள்” என்று மாணவிகளை நோக்கி அவர் கட்டளையிட்டுள்ளார். ஆனால், பள்ளிக்கு நேரம் ஆகிவிட்டதாலும், கல்வி மீது கொண்ட பற்றினாலும் மாணவிகள் இறங்க மறுத்துள்ளனர்.

மாணவிகள் இறங்க மறுத்ததை அடுத்து, ஆத்திரம் அடைந்த நடத்துநர் திடீரென பேருந்தின் கதவைத் திறந்துள்ளார். பாதிக்கப்பட்ட மாணவிகள் தரப்பு  கூறும் தகவலின்படி, ஒரு மாணவியை நடத்துநர் பலவந்தமாக கீழே தள்ளிவிட்டுள்ளார். நிலை தடுமாறிய அந்தப் பெண் கீழே விழ, அதைப் பார்த்த அதிர்ச்சியிலும் பயத்திலும் மற்ற மாணவிகளும் ஒருவர் பின் ஒருவராக நிலைகுலைந்து கீழே விழுந்தனர். இந்தத் திடீர் விபத்தில் மாணவிகளுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டு அலறித் துடித்தனர்.

இந்தத் தகவல் காட்டுத்தீ போல கிராமம் முழுவதும் பரவ, ஊரே திரண்டு வந்து சாலை மறியலில் குதித்தது. உடனே தகவலறிந்து வந்த 108 ஆம்புலன்ஸ் மூலமாக காயமடைந்த அனைத்து மாணவிகளும் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். தற்போது அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் இந்தச் செய்தி தீயாய் பரவவே, போக்குவரத்து துறை அதிகாரிகள் உடனடியாக களத்தில் இறங்கி விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில், அலட்சியமாகவும் மனிதநேயமற்றும் நடந்து கொண்ட சம்பந்தப்பட்ட பேருந்து ஓட்டுநர் அர்ஜுனனை பணியிடை நீக்கம் செய்தும், தற்காலிக நடத்துநர் மணிகண்டனை நிரந்தர பணிநீக்கம் செய்தும் அதிகாரிகள் அதிரடியாக உத்தரவிட்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், திமுக எம்.பி கனிமொழி தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். “புதுக்கோட்டை அருகே அரசு பேருந்திலிருந்து பழங்குடியின மாணவிகளைத் தள்ளிவிட்டது அதிர்ச்சியளிக்கிறது. கல்வி கற்கச் செல்லும் குழந்தைகள் மீதே தீண்டாமைக் கொடுமையை நிகழ்த்துவதா? பேருந்தில் கூட்டம் இருப்பதாகக் கூறி மாணவிகளை கீழே தள்ளிவிட்டது மனிதநேயமற்ற கொடூரச் செயல்; உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர்  தெரிவித்துள்ளார்.