கவுரவ விரிவுரையாளர் பணியிடங்கள் யாருடைய சிபாரிசும் இல்லாமல் இட ஒதுக்கீடு அடிப்படையில், முழு வெளிப்படை தன்மையுடன் நடத்தப்பட்டுள்ளது என உயர்கல்வி அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். இது குறித்து சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது, கடந்த பத்து வருடங்களில் மேற்கொள்ளப்பட்ட கவுரவ விரிவுரையாளர் பணி நியமனங்களில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. இட ஒதுக்கீடு விதிகள் முறையாக பின்பற்றப்படவில்லை.

இந்நிலையில் இதனை சரி செய்யும் விதமாக கவுரவ விரிவுரையாளர் நியமனத்தில் இட ஒதுக்கீட்டை பின்பற்ற தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து மொத்தம் உள்ள 1,895 கவுரவ விரிவுரையாளர் பணியிடங்களுக்கு 9,915 பேர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்தவர்களின் கல்வி தகுதி பி.எச்.டி என்ற  ஆராய்ச்சி பட்டம் ஜே.ஆர்.எப் என்ற இளநிலை ஆசிரியர்கள் மற்றும் தேசிய அளவிலான நிலை தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. இப்படி ஆறு வகையான முன்னுரிமை வரிசையில் தரவரிசையை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக மாற்றுத்திறனாளிகளுக்கு நான்கு சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு அவர்களுக்கு கவுன்சிலிங் நடத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து மற்றவர்களுக்கான கவுன்சிலிங் இன்று தொடங்குகிறது. இதில் முழுமையான வெளிப்படை தன்மை பின்பற்றப்பட்டுள்ளது. மேலும் யாருடைய சிபாரிசும் தலையிடும் இல்லாமல் கல்வித் தகுதி இட ஒதுக்கீட்டு விதிப்படி  மட்டுமே நியமனங்கள் நடைபெற்றுள்ளது. அதேபோல் அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள 4000 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் வழியே போட்டி தேர்வு நடத்தி இந்த வருடத்திற்குள் நியமங்கள் முடிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.