தமிழகத்தில் திமுகவினரால் தான் கள்ளத்துப்பாக்கி கலாசாரம் அதிகரித்துள்ளதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார். நெல்லை அருகே கள்ளத்துப்பாக்கிகளைப் பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக திமுகவின் பொறியாளர் அணியைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், இது கடும் கண்டனத்திற்குரியது எனத் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கடந்த ஆண்டு அரக்கோணத்தில் ஒரு திமுக கவுன்சிலர் கள்ளத்துப்பாக்கியுடன் பிடிபட்ட நிலையில், தற்போது மீண்டும் ஒரு திமுக நிர்வாகி கைதாகியிருப்பது, தமிழகத்தில் இத்தகைய சட்டவிரோதச் செயல்களுக்கு ஆளுங்கட்சியினரே காரணமாக இருக்கிறார்களோ என்ற அச்சத்தை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
மேலும், போதைப்பொருள் கடத்தல், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் மற்றும் கள்ளத்துப்பாக்கி விற்பனை எனத் தமிழகத்தில் நடைபெறும் பல்வேறு சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளில் திமுக நிர்வாகிகளுக்குத் தொடர்பு இருப்பது உறுதியாகியுள்ளதாக தினகரன் விமர்சித்துள்ளார்.
எனவே, இந்தத் துப்பாக்கி விற்பனை வழக்கில் பிடிபட்ட நபரை முழுமையாக விசாரித்து, இதன் பின்னணியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சமின்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.
