தமிழக முதல்வர் ஸ்டாலின் குடிநீர் பற்றாக்குறை தொடர்பாக தலைமைச் செயலகத்தில் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அப்போது தமிழகத்தில் கோடைகாலத்தை கருத்தில் கொண்டு பொதுமக்களுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்படாதவாறு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று கூறினார். தற்போது அணைகளில் உள்ள நீரை சிக்கனமாக பயன்படுத்தி குடிநீர் தேவையை நிறைவு செய்ய வேண்டிய கடினமான சூழலில் இருக்கிறோம்.

இதனை கருத்தில் கொண்டு அனைத்து துறை அலுவலர்களும் கவனமான முறையில் செயல்பட்டு குடிநீர் பற்றாக்குறை நிலவக்கூடிய அனைத்து பகுதிகளுக்கும் சென்று உடனடியாக தீர்வு காண வேண்டும். அதன் பிறகு குடிநீர் பற்றாக்குறை உள்ள 22 மாவட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 150 கோடி நிதியை தேவைக்கேற்ப பயன்படுத்துவதோடு அனைத்து துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று கூறினார். மேலும் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும் எனவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.