அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தற்போது ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, நாமக்கல் அருகே சட்டவிரோதமாக நடைபெற்ற சிறுநீரகத் திருட்டில் திமுக நிர்வாகிக்குத் தொடர்பிருப்பதாகப் புகார் – ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதர்களையும் கடிக்கத் துணிந்துவிட்டனரா திமுகவினர்?
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம், குமாரப்பாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசித்து வரும் ஏழைத் தொழிலாளர்களின் சிறுநீரகங்கள் கொள்ளையடிக்கப்பட்டு வருவதாக ஊடகங்களிலும் நாளிதழ்களிலும் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
வேலைவாய்ப்பில்லாமல் வறுமையில் வாடும் எளிய மக்களிடமிருந்து சட்டவிரோதமாகக் கொள்ளையடிக்கப்படும் சிறுநீரகங்கள், ஆந்திரா, தெலங்கானா போன்ற அண்டை மாநிலங்களில் பல லட்ச ரூபாய் அளவிற்கு விற்பனை செய்யப்படுவதன் பின்னணியில் திமுக நிர்வாகி ஒருவர் இடைத்தரகராகச் செயல்பட்டிருப்பதும் விசாரணையில் தெரியவந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கும், போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனையிலும் தொடர்பிலிருந்த திமுகவினர், தற்போது சட்டவிரோத சிறுநீரகத் திருட்டு சம்பவங்களுக்கும் இடைத்தரகர்களாகச் செயல்பட்டிருப்பதன் மூலம், ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து கடைசியாக மனிதனையும் கடிக்கும் சூழலுக்கு திமுகவினர் துணிந்துவிட்டனரா? என்று கேட்கத் தோன்றுகிறது.
எனவே, ஏழைத் தொழிலாளர்களிடம் சட்டவிரோதமாகச் சிறுநீரகத்தைக் கொள்ளையடித்த கும்பல், இடைத்தரகாக செயல்பட்ட திமுக நிர்வாகி, உடந்தையாக இருந்த தனியார் மருத்துவமனைகள் உட்பட அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, இனிவரும் காலங்களில் இதுபோன்ற சிறுநீரகத் திருட்டுச் சம்பவங்கள் நடைபெறாத வகையில் குழு அமைத்துக் கண்காணிக்க வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
இதே போன்று பாஜக கட்சியின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜனும் சிறுநீரக கடத்தலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது பற்றி செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறும்போது, மணல் கடத்தல் இப்போது ஜல்லி கடத்தல் ஆகியுள்ளது. சிறுநீரக மாற்றிய அறுவை சிகிச்சை செய்த முறைகேடு நாமக்கல் மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
திமுக கட்சியை சேர்ந்தவர் நடத்தும் ஒரு பிரமாண்ட மருத்துவமனையில் வெளிநாட்டை சேர்ந்தவர்களுக்கு மாற்று அறுவை சிகிச்சை விதிகளுக்கு மாற்றாக விதிகளை மீறி மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இந்த நிலையில்தான் மக்களை சந்தித்து பத்து நிமிஷம் பேச வேண்டும் என முதல்வர் சொல்கிறார். மேலும் இது எத்தனை நிமிஷம் சொன்னாலும் மக்கள் அவருடைய பேச்சை நம்ப மாட்டார்கள் என்றார்.
