தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேல் மின் கட்டணம் செலுத்தாமல் உள்ளவர்களின் கணக்கை முடிக்க மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. தற்போது வீடுகளில் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின் பயன்பாடு கணக்கு எடுக்கப்பட்டு வருகின்றது. அப்படி மின்கட்டணம் கணக்கு எடுத்த 20 நாட்களுக்குள் மின்கட்டணம் செலுத்தாவிட்டால் மின்விநியோகம் துண்டிக்கப்படும். அதனைப் போலவே வணிகம் மற்றும் தொழிற்சாலை உள்ளிட்ட ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனியாக அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் சிலர் கால அவகாசத்தை தாண்டியும் கட்டணம் செலுத்தாமல் இருப்பதால் அவர்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படுவதில்லை.

இதனால் மின்வாரியத்திற்கு இழப்பு ஏற்படுவதால் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் மின்கட்டணம் செலுத்தாமல் உள்ள மின் இணைப்புகளின் கணக்கை நிரந்தரமாக முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. துணை நிதி கட்டுப்பாட்டு அதிகாரிகள், கணக்கிட்டு அதிகாரிகள் உள்ளிட்டோர் மாதத்தில் 5 முதல் 10 நாட்கள் வரை மின் இணைப்பு இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் எனவும் இதன் மூலமாக முறைகேடாக மின்சாரம் பயன்படுத்துவது போன்ற தவறுகள் தடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.