தமிழகம் முழுவதும் உள்ள 91 வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும் 54 வாகன போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகங்களிலும் பொதுமக்கள் தங்களின் சேவைகளை எவ்வித சிரமமும் இல்லாமல் பெரும் விதமாக கணினி மயமாக்கும் முயற்சிகள் தற்போது எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்ந்த 48 சேவைகளில் முதல் கட்டமாக ஓட்டுனர் உரிமம் புதுப்பித்தல், ஓட்டுநர் உரிமத்தில் முகவரி மாற்றம் மற்றும் பழகுணர் உரிமம் பெறுதல் உள்ளிட்ட ஆறு சேவைகள் முற்றிலுமாக இணையவளியில் ஏற்கனவே கொண்டுவரப்பட்டு தற்போது செயல்பாட்டில் உள்ளது.

இதனை தொடர்ந்து மீதமுள்ள 42 சேவைகளும் இணையவழியில் கொண்டுவரப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட நிலையில் 25 சேவைகள் நேற்று முதல் முழுக்க முழுக்க இணைய வழியில் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி நகல் பழகுணர் உரிமம், நகல் ஓட்டுநர் உரிமம், ஓட்டுநர் உரிமத்தில் பெயர் மாற்றம் மற்றும் பன்னாட்டு ஓட்டுநர் உரிமம் போன்ற 25 சேவைகளை முற்றிலும் இணைய வழியில் மட்டுமே பெற முடியும். மீதமுள்ள 17 சேவைகளையும் இணைய வழியில் கொண்டு வருவதற்கு தேசிய தகவல் மையம் தற்போது நடவடிக்கை எடுத்து வருகின்றது.

மேலும் சேவைகளை பெறுவதற்கு ஆதார் அட்டையில் உள்ள பெயர் மற்றும் முகவரி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் சரியாக இருக்க வேண்டும். ஒருவேளை விவரங்கள் மாறுபட்டிருந்தால் சேவையை பெற முடியாது. தற்போது அமலுக்கு வந்துள்ள 31 சேவைகளையும் https://tnsta.gov.inஎன்ற போக்குவரத்து ஆணைய இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.