சென்னை கிழக்கு கடற்கரை ஈசிஆர் சாலையில் பெண்கள் சென்ற காரை திமுக கொடி பொருத்திய சொகுசு காரில் துரத்திச் சென்று இளைஞர்கள் வழிமறித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை கிளப்பியது. இரண்டுக்கும் மேற்பட்ட இளம் பெண்கள் சென்று கொண்டிருந்த காரை ஐந்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் நடு ரோட்டில் இடைமறித்தது மட்டுமல்லாமல் தொடர்ந்து அவர்களை பின்தொடர்ந்து மீண்டும் மீண்டும் இடைமறித்த வீடியோ வெளியானது. இந்த சம்பவம் தொடர்பாக நான்கு பிரிவுகளில் இளைஞர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை வலை வீசி தேடி வந்த நிலையில் 5 பேரையும் கைது செய்துள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து பேசி உள்ள தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், இசிஆர் சாலையில் நடந்த இந்த விவகாரம் தொடர்பான வீடியோ ஒவ்வொரு பெண் பிள்ளைகளை பெற்றோருக்கும் எவ்வளவு வலியை தந்திருக்கும் என்பது எனக்கு நன்றாக தெரியும். இனி இது போன்ற ஒரு தரங்கெட்ட கொடூரமான அருவருப்பான செயல்களில் யாரும் ஈடுபட மாட்டார்கள் ஈடுபடக் கூடாது என்பதுதான் என் விருப்பம். இப்படி யாரும் செய்யாத அளவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் நடவடிக்கை கடுமையாக இருக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துக் கொள்கிறேன்.

குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை பாலியல் வன்கொடுமை செய்கிற காமக்கொடூரர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்ற சட்டத்தை கொண்டு வந்தவனே நான்தான். இது போன்ற மிருகங்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்ற மசோதாவை சட்டசபையில் நிறைவேற்ற வலியுறுத்தியது நான்தான். பெண்களை சும்மா தீண்டினால் கூட நடவடிக்கை பாயும் என்பதும் தொடர்ந்து பாலியல் வன்புரவு செய்து வந்தால் மரண தண்டனை வழங்கப்படும் என்ற சட்டம் சமீபத்தில் நம் தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டது நாடு முழுவதும் சென்று சேர வேண்டும். அப்படி சென்றால்தான் சோசியல் மீடியாக்களில் வீர சாகசம் காட்டும் அனைவரும் அடங்குவார்கள். பெண்களை பாலியல் பார்வையாக பார்ப்பது கூட மட்டுப்படுத்தப்படும் என்று வேல்முருகன் பேசியுள்ளார்.